LATEST NEWS

ருமேனியாதொழில் விசா முறைக்கு தீர்வுகளை நாடுகிறது...

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் தலையீட்டுடன், ருமேனியாவில்தொழில்வாய்ப்பைப் பெறுவதற்கான விசா வழங்குவதில் அதிக தாமதத்தைத் தடுக்கும் வகையில் 28.01.2025 அன்று ருமேனியா தூதரகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று பணியகத்தில் நடைபெற்றது. ருமேனியாவில் தொழில் வாய்ப்புக்காக இலங்கை தொழிலாளர்களைபணியமர்த்துவதற்காக பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட சுமார் 164 வேலைவாய்ப்பு முகவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ருமேனியாவில் தொழில்வாய்ப்பை வழங்குவதற்காக தற்போது சுமார் 235 பதிவுசெய்யப்பட்ட வேலைவாய்ப்பு முகவர்கள் பணிபுரிகின்றனர்.

இலங்கை ருமேனியாவில் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளதுடன், அந்த வேலை வாய்ப்புகளுக்கான வீசாக்களுக்கு விண்ணப்பிப்பதில் அதிக காலதாமதம் ஏற்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் பணியகத்திற்கு அறிவித்ததை அடுத்து, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் தலையீட்டின் மூலம் ருமேனியா தூதரகத்திற்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

விசாவிற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் விசாவின் போது நடத்தப்பட்ட நேர்காணலில் தோல்வியுற்றதே விசா தாமதத்திற்கு காரணம் என்று தூதரகத்திற்கு தெரிவித்ததை அடுத்து, இது குறித்து விவாதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த விவாதத்தின் விளைவாக, விசா விண்ணப்பங்களுடன் ஆவணங்களைச் சரியாகச் சமர்ப்பித்தல் மற்றும் நேர்காணலின் போது ஆங்கிலத்தில் சரியான பதில்களை வழங்குவது தொடர்பாக இங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதன் மூலம் எதிர்காலத்தில் விசா தாமதத்தை குறைக்க முடியும் என பணியகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், விசா விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு வருவதற்கு முன் ஆங்கிலத்தில் சரியான பதில்களை அளிக்க சிறப்புப் பயிற்சி வகுப்புக்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் பணியக பொது முகமையாளர் டி.டி.பி. சேனநாயக்க, மேலதிக பொதுமுகமையாளர்களான அனுர லியான்வாலா, பி.பி. வீரசேகர, செனரத் யாப்பா, இலங்கையில் உள்ள ருமேனிய தூதரகத்தின் பொறுப்பாளர் திருமதி மிஹேலா-ஏஞ்சலா ருட்ஜென்ஸ்(Mrs. Mihaela-Angela Rutjens), ருமேனிய தூதரகத்தின்கொன்சிலுலர் பிரிவின் பணியாளர் திருமதி ஆண்ட்ராடா-ரலுகா பிலிப்(Ms. Andrada-RalucaFilip) மற்றும் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் குழு ஆகியோர் கலந்து கொண்டனர்.

TA